சென்னை: அம்பத்தூரை அடுத்த பட்டரவாக்கம் சாலையில் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. அங்கு ஏராளமான வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த தொழிற்சாலையில் ஆயுத பூஜை விழா இரவில் நடைபெற்றுள்ளது. அப்போது, அங்கு இருந்த 200க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள், மது போதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, சம்பவம் அறிந்து வந்த அப்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் ரகுபதி மற்றும் காவலர் ராஜ்குமார் ஆகியோர் நேரில் விசாரிக்கச் சென்றனர். பின், இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அவர்களை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள், காவலரை கற்களால் சரமாரியாக தாக்கியதாகத் தெரிகிறது. மேலும் போலீசார் வந்த வாகனத்தையும் அடித்து நொறுக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் படுகாயம் அடைந்த காவலர் ரகுபதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து தொழிற்சாலையில் போலீசார் குவிக்கப்பட்டு, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் மீது தாக்குதலில் ஈடுபட்ட வடமாநிலத் தொழிலாளர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.