தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டை இறுதிசெய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றன. அந்த வகையில் அதிமுக கூட்டணியில் முதற்கட்டமாக தனியார் நட்சத்திர விடுதியில் அதிமுக, பாமக மூத்தத் தலைவர்கள் முன்னிலையில் பாமகவிற்கு 23 இடங்கள் ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுகவில் தற்போதுவரை கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு நிறைவுபெறாத நிலையில் நேற்று மதியம் அதிமுக வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தனது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்திலுள்ள போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
இபிஎஸ் 5 - ஓபிஎஸ் 6
இவர்களில் இபிஎஸ் எடப்பாடி தொகுதியில் தொடர்ந்து ஐந்தாவது முறையாகவும், போடிநாயக்கனூர் தொகுதியில் ஓபிஎஸ் மூன்றாம் முறையாகவும், ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமார் ஆறாவது முறையாகவும் போட்டியிடுகின்றனர்.
பாஜக, அதிமுக உடன்படிக்கை எப்போது கையெழுத்தாகும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று (மார்ச் 5) நள்ளிரவு ஒப்பந்தம் கையெழுத்தாகி பத்திரிகைகளுக்குச் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
பாஜகவிற்கு 30 தொகுதிகள் வரை கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் 20 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படுமென அதிமுக தரப்பு பிடிவாதமாக இருந்தது. இதனால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்துவந்ததாகக் கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள சூழலில் வேறு வழியின்றி பாஜக உடனான கூட்டணி உடன்படிக்கை கையெழுத்தானதாகத் தெரிகிறது.
டெல்லி உத்தரவு - நள்ளிரவு ஒப்பந்தம் கையெழுத்து
டெல்லியில் 5 மாநிலத் தேர்தல் தொடர்பாக நேற்று பாஜக நாடாளுமன்ற நிலைக்குழு கூடி விவாதித்து தொகுதிப்பங்கீட்டை இறுதிசெய்துள்ளது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி விவகாரம் குறித்து தீவிரமாக கலந்தாலோசிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பாஜக மேலிட உத்தரவின்பேரில் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் சி.டி. ரவி, பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் எல். முருகன் ஆகியோர் அதிமுகவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
ஊடகங்களுக்கு எந்தவொரு முன்னறிவிப்பும் செய்யப்படாமல், இந்த நள்ளிரவு ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டு, ஃபேக்ஸ் மூலம் அதன் அறிவிப்பு நகல் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் தேதி நெருங்குவதால் இதற்கு மேல் காலதாமதப்படுத்த முடியாது என்பதால் உடனே ஒப்புதல் வழங்கியுள்ளதாக இருதரப்பிலும் காரணம் சொல்லப்படுகிறது.
பாஜக வேட்பாளர் பட்டியல்
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய கட்சியான அகில இந்திய காங்கிரசுடன் தொகுதிப்பங்கீடு தொடர்பாக தீவிர பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் சூழலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கான தொகுதிப் பங்கீடு நேற்றிரவு கையெழுத்தாகியுள்ளது.
எதிர்வரும் மார்ச்10ஆம் தேதி பாஜகவின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா தமிழ்நாடு வரும்போது அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.