சென்னை:கூட்டுறவுச் சங்கங்களில் வட்டி வருவாய் 40 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமானால் வருமான வரிச் சட்டத்தின் 194ஏ மற்றும் 194என் ஆகிய பிரிவுகளின் கீழ் வருமான வரி பிடித்தம் செய்ய வேண்டுமென மாநில அரசு தலைமை கூட்டுறவு வங்கி மூலம் பல்வேறு கூட்டுறவுச் சங்கங்களுக்குக் கடந்த 2021ஆம் ஆண்டு சுற்றறிக்கை பிறப்பித்தது.
இந்த சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி ஈரோடு மாவட்டம் சென்னிமலை சிரகிரி முருகன் தொடக்க நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் உள்ளிட்ட 5 சங்கங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தன.
இந்த வழக்குகளை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். அப்போது, மனுதாரர் சங்கங்கள் தரப்பில் அரசின் பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணம் உள்ளிட்ட பலன்களை உறுப்பினர்களுக்கு வழங்கும் பணியைச் சங்கங்கள் மேற்கொள்கின்றன என்றும், அதனால் உறுப்பினர்களுக்கு வழங்குவதற்காக எடுக்கப்படும் தொகைக்கு வருமான வரி செலுத்த முடியாது என்றும், வருமான வரி விலக்கு வழங்கப்பட்டது என்றும் வாதிடப்பட்டது.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த வருமான வரித் துறை தரப்பு, மனுதாரர் சங்கங்களுக்கு எந்த விலக்கு வழங்கப்படவில்லை என்றும், தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களுக்குத் தான் வரி விலக்கு பொருந்தும் என்றும் வாதிடப்பட்டது. மேலும், வங்கிகளிலிருந்து எடுக்கும் பணத்தின் உச்ச வரம்பை அப்போதைய முதல்வர் மற்றும் தலைமைச் செயலாளரின் கோரிக்கையை ஏற்று ஒரு கோடி ரூபாயிலிருந்து 3 கோடியாக அதிகரித்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முதலீடுகளைப் பெற்று வட்டி வழங்கக்கூடிய மனுதாரர் சங்கங்கள், ரிசர்வ் வங்கி விதிகளின்படி, வங்கி நடவடிக்கை தான் என்பதால் வரி பிடித்தம் செய்யலாம் எனவும், தற்போதைய நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்து, அதில் அதிகமாக பிடித்தம் செய்திருந்தால் திரும்ப வழங்கக் கோரலாம் எனக் கூறிய நீதிபதி, இது முன்கூட்டியே தொடரப்பட்ட வழக்கு எனத் தெரிவித்து வழக்குகளை முடித்துவைத்தார்.
மேலும், வருமான வரிச் சட்டம் 194என் பிரிவு, ரொக்கமில்லா பண பொருளாதாரத்தை நோக்கிப் பயணிக்கும் வகையிலும், சட்டவிரோத பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் கொண்டு வரப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய நீதிபதி, ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனையில் பணம் பாதுகாப்பாக இருப்பதுடன், தொலைந்து போகவோ? திருடப்படவோ வாய்ப்பு இல்லை? என்றும் தெரிவித்துள்ளார்.
ரொக்கமாகக் கையாண்ட பல சங்கங்கள், அரசு அதிகாரிகளுடன் கைகோர்த்து போலிக் கணக்குகளை உருவாக்கி பணம் வழங்கி மோசடியில் ஈடுபட்ட வழக்குகளையும் நீதிமன்றம் சந்தித்துள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, அரசின் கடன் தள்ளுபடி அல்லது வட்டி தள்ளுபடி போன்ற சலுகைகள் போலி நபர்களுக்கும் சென்றடைகின்றன என்றும், வருமான வரி சட்டத்தின் பிரிவு 194என் என்பது பண விநியோகத்தில் முறைகேடுகளைத் தடுப்பதற்கும், பணமில்லாப் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்குமான வழிகளில் ஒன்றாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.