சென்னை:பன்னிரண்டு மணி நேர வேலை நேரம் குறித்த தமிழக அரசின் சட்டத்திருத்தம், வெளி மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறியது, கஞ்சா புழக்கம், மதுபான விற்பனை ஆகியவை தொடர்பாக நடந்த போராட்டங்கள் தொடர்பாக தமிழக அரசையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை விமர்சித்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் பேசியிருந்தார்.
இந்த விவகாரங்கள் மூலம் அரசு மற்றும் முதலமைச்சரின் நற்பெயருக்கும் களங்கம் விளைவித்ததாக கூறி சி.வி.சண்முகத்திற்கு எதிராக 4 அவதூறு வழக்குகளை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்திருந்தது. இவற்றை ரத்து செய்யக் கோரி சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சி.வி.சண்முகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, முதல்வரை தாக்கியோ? நேரடியாகவோ? பேசவில்லை என்றும், தமிழக அரசை மட்டுமே விமர்சித்ததாகவும், தங்கள் போராட்டத்திற்கு பிறகு 12 மணி நேர வேலை அரசு அறிவிப்பை திரும்பப் பெறப்பட்டது. அதனால், தங்கள் கருத்து எப்படி அவதூறாக கருத முடியும் என வாதிட்டார்.