தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு: உயர் நீதிமன்றம் மறுப்பு

கரோனா தொற்று பரவலால் உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

mhc
mhc

By

Published : Jun 8, 2021, 5:00 PM IST

சென்னை:கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்ய நிவாரணம் வழங்குவதோடு, வாரிசுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் ஒரு வழக்கு, கோயம்புத்தூர் சுற்றுப்புறப் பகுதிகளில் கரோனா தொற்று பரவல் குறையாததால் அங்கு அரசு சிறப்பு கவனம் செலுத்த உத்தரவிட வேண்டும் என மற்றொரு வழக்கு என, பூமிராஜ் என்பவர் இரண்டு வழக்குகளைத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசின் கொள்கை முடிவுகள் தொடர்பான விவகாரங்களை எதிர்த்து தொடரப்படும் பொதுநல வழக்குகள் பெரும்பாலும் விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்படுகின்றன.

கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு தான் முடிவெடுக்க வேண்டும். அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டுமென உத்தரவிட முடியாது” எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், ஒன்றிய - மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், அவை நீதிமன்ற தலையீடு இல்லாமல் தொடர வேண்டுமென விரும்புவதாகவும் தெரிவித்தனர்.

கோயம்புத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும், நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதால் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். ஒருவேளை நடவடிக்கை தேவைப்பட்டால், நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துள்ள வழக்கில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் எனவும் கூறி பூமிராஜ் தொடர்ந்த இரண்டு வழக்குகளையும் நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: கரோனா பரிசோதனைக்கு ஒத்துழைத்த சமத்து யானைகள்

ABOUT THE AUTHOR

...view details