சென்னை:சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யக்கோரி அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் தேமுதிக விஜயகாந்த் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். அதில் சட்டமன்ற நிகழ்வுகள் பகுதி பகுதியாக ஒளிபரப்பு செய்யப்படுவதாகவும், மற்ற அரசியல் கட்சி உறுப்பினர்களின் பேச்சுக்களை முழுமையாக ஒளிபரப்பு செய்யாமல், பாரபட்சம் காட்டுவதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (அக்.18) விசாரணைக்கு வந்தது. அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, மக்களவை, மாநிலங்களவை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் நிலையில், டிஜிட்டல் யுகத்தில் சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன சிக்கல் உள்ளது? எனக் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்வது சாத்தியமற்றது எனவும், சில நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதாகவும் விளக்கமளித்தார்.