சென்னை:சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி அமலாக்கத்துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம், செந்தில் பாலாஜி தரப்பில் குற்றம் செய்யவில்லை என்பதற்கான ஆதாரங்களை நிரூபிக்கவில்லை என தெரிவித்து, செப்.20ஆம் தேதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று (அக்.16) விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'அமைச்சர் கைது செய்யப்பட்டபோது, உரிய விதிமுறை பின்பற்றப்படவில்லை என நீதிமன்றம் கருதினால் ஜாமீன் வழங்கலாம். கைது செய்யப்படுவதற்கு முன் அமைச்சரிடமோ? அவரது உறவினரிடமோ? உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை. நெஞ்சு வலிக்கு நீண்டகாலமாக மருத்துவ சிகிச்சையில் இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும்.
அமைச்சர் அதிகாரத்தில் உள்ளவர் என்பதால் ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஸ்டான்லி மருத்துவமனையில் 13 மருத்துவர்கள் கொண்ட குழு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அக்.9 ஆம் தேதி சிகிச்சை அளித்தது. மருத்துவ அறிக்கையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். மருத்துவ சிகிச்சையில் இருப்பவர் அவருக்கான உரிமைகளைப் பெற சட்டம் அனுமதி வழங்குகிறது. 15 நிமிடங்களுக்கு மேல் நிற்க முடியாத அளவுக்கு அமைச்சர் பாதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும்' என்று வாதிட்டார்.