சென்னை:அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில், கடந்த 2010 - 11ம் ஆண்டுகளில் மாதம் 20 ஆயிரம் ரூபாய் என்கின்ற தொகுப்பூதியத்தில், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்காமல், புதிதாக தற்காலிக ஆசிரியர்கள் தேர்வுக்காக அறிவிப்பாணை வெளியிடப்பட்டதை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு தனி நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த தனி நீதிபதி, புதிதாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்றும், காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டும், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தற்காலிக ஆசிரியர்கள் மேல்முறையீடு செய்தனர். தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்குகள், நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் கே.குமரேஷ் பாபு அமர்வில், கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கும் விஷயத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் நிலைப்பாடு என்ன? என்றும், 12 ஆண்டுகளாக தற்காலிக ஆசிரியர்களாக உள்ளவர்களை பணி நிரந்தரம் செய்ய என்ன சிக்கல் உள்ளது? தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய தயங்குவதேன்? நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க ஏன் நேரடி தேர்வு நடத்த முடியாது? எனக் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
இந்த வழக்கு இன்று (அக்.03) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பல்கலைகழகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில், "அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமமான ஏஐசிடிஇ விதிமுறைப்படி உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் என ஆயிரத்து 745 ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்றும், ஆனால் 981 பணியிடங்கள் மட்டுமே அனுமதிக்கபட்டுள்ளது.