சென்னை:சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரஜினி. இவர் மீது குற்றவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்காக சேலம் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இந்நிலையில் இது குறித்து ரஜினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், காவல்துறை அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் அழைத்து தன்னை துன்புறுத்தக் கூடாது எனவும், இதற்கான உத்தரவை காவல்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இதையும் படிங்க:ஈபிஎஸ் எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படுமா? சொத்து விவரத்தில் தவறான தகவல் வழக்கில் அறிக்கை தாக்கல்!
இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி சத்திகுமார் தலைமையிலான அமர்விடம் காவல்துறை சார்பில் மனு ஒன்றி அளிக்கப்பட்டது. அந்த மனுவில், மனுதாரருக்கு எதிராக பெறப்பட்ட புகாரில் விசாரணை நடத்துவதற்காகவே சம்மன் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சத்திகுமார், காவல்துறை விசாரணையில் மாஜிஸ்திரேட் தலையிட முடியாது என்பதால், காவல்துறை தங்களை துன்புறுத்த கூடாது என்ற கோரிக்கையுடன் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்படுள்ளதாக குறிப்பிட்டார்.
இதையும் படிங்க:"இரண்டு ஆண்டுகளில் 288 கோடி முறை பெண்கள் கட்டணமில்லா பயணம்" - அமைச்சர் உதயநிதி!
மேலும், காவல்துறை விசாரணையில் உயர் நீதிமன்றமும் தலையிடுவது இல்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார். ஆனால் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு காவல்துறையினர் விசாரணைக்காக வரும் நபர்களை துன்புறுத்தக்கூடாது எனவும் அப்படி நடந்ததாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு ஏதேனும் தகவல் வந்தால் நீதிமன்றம் கைகட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்காது எனவும் எச்சரிக்கை விடுத்தார். அதனை தொடர்ந்து, குறிப்பிட்ட மனுதாரரான ரஜினி விசாரணைக்கு மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதால், காவல்துறை விசாரணைக்கு ஆஜராக மனுதாரருக்கு நீதிபதி உத்தரவிட்டு அந்த வழக்கை முடித்தார்.
இதையும் படிங்க: அரிசி கொம்பனால் கம்பத்தில் 144 தடை... பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்ட 2 கும்கிகள்...
மேலும், விசாரணைக்கு அழைப்பதற்கான சம்மன் எழுத்துப்பூர்வமாக அனுப்பப்பட வேண்டும் எனவும், விசாரணைக்கு ஆஜராக வேண்டிய தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிடவேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தினார். மேலும், விசாரணை நடைமுறைகளை காவல் நிலையங்களில் உள்ள பதிவேட்டில் பதிவேற்ற செய்ய வேண்டும் என தெரிவித்த நீதிபதி, விசாரணைக்கு அழைக்கப்படும் நபர்களை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும், விதிமுறைகளுடன் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பின்பற்றப்பட வேண்டும் எனவும் காவல்துறைக்கு அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ஏன் பங்கேற்க கூடாது? - கமல்ஹாசன் கேள்வி!