சென்னை:எண்ணூரில் அனல் மின் நிலையம் அமைக்க 4,442 கோடி ரூபாய்க்கான டெண்டரை பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடந்துள்ளதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பெல் நிறுவன தொழிற் சங்கங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.
சென்னை எண்ணூரில் உள்ள அனல் மின் நிலையத்தை விரிவாக்கும் திட்டத்தில்(Expansion of thermal power plant at Ennore), 660 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட கூடுதல் அலகை அமைப்பதற்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமான டான்ஜெட்கோ (Tangedco) கடந்த 2019ஆம் ஆண்டில் டெண்டர் கோரியது. இதில் பங்கேற்ற மத்திய அரசின் பெல் நிறுவனம் 4,957 கோடியே 11 லட்ச ரூபாய்க்கும், பிஜிஆர் எனர்ஜி சிஸ்டம்ஸ் என்கிற தனியார் நிறுவனம் 4,442 கோடியை 75 லட்ச ரூபாய்க்கும் டெண்டர் கோரிய நிலையில், குறைவான தொகை குறிப்பிட்டிருந்த பிஜிஆர் நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கப்பட்டது.
மொத்த தொகையில் 10 சதவீதத்தை வங்கி உத்தரவாதமாக 30 நாட்களில் செலுத்த வேண்டுமென்ற டெண்டர் நிபந்தனைப்படி, உத்தரவாதத் தொகையை 16 மாதங்களாக செலுத்தாததால் டெண்டர் ஒதுக்கிய உத்தரவை ரத்து செய்து 2021 ஏப்ரல் 23ஆம் தேதி டான்ஜெட்கோ உத்தரவிட்டது. இதை எதிர்த்து பிஜிஆர் எனர்ஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே தொடர்ந்திருந்த வழக்கில், மீண்டும் டெண்டர் கோரக்கூடாது எனவும், தற்போதுள்ள நிலை நீடிக்க வேண்டுமென இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மீண்டும் பிஜிஆர் நிறுவனத்திற்கே வழங்கி டான்ஜெட்கோ 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது.
இதில் முறைகேடு மற்றும் ஊழல் நடந்திருப்பதாகவும், இந்திய தண்டனை சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி திருச்சி, ராணிப்பேட்டை, திருமயம் ஆகிய இடங்களில் உள்ள பெல் நிறுவனங்களின் தொழிற் சங்கங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.