தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுச்சேரியில் கோயில் நிலம் அபகரிப்பில் எம்எல்ஏக்களுக்கும் தொடர்பு - உயர் நீதிமன்றம் அதிருப்தி! - புதுச்சேரி கோயில் நிலம் அபகரிப்பு

Temple land encroached by Puducherry MLAs: ஆக்கிரமிக்கப்பட்ட கோயில்களுக்குச் சொந்தமான நிலத்தை புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களிடம் இருந்து மீட்டு, குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி கோயில் நிலம் அபகரிப்பு
புதுச்சேரி கோயில் நிலம் அபகரிப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 5:02 PM IST

சென்னை:புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 50 கோடி ரூபாய் மதிப்பிலான 64 ஆயிரம் சதுர அடி நிலத்தை, போலி பத்திரம் தயாரித்து, தனியார் நிறுவனத்திடம் விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின. இந்நிலையில், போலியாக தயாரிக்கப்பட்ட விற்பனைப் பத்திரத்தை ரத்து செய்யக் கோரி கோயில் நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில், நில அபகரிப்பில் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், பாஜகவைச் சேர்ந்த, தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களான ஜான்குமார் மற்றும் விவிலியன் ரிச்சர்டு ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. முன்னதாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று (செப் 26) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து விசாரணை மேற்கொண்ட புதுச்சேரி சிபிசிஐடி காவல் துறையினர், மூடி முத்திரையிட்ட உறையில் அறிக்கையை நீதிபதி முன்னிலையில் தாக்கல் செய்தனர். பின்னர், இது குறித்து இரு எம்.எல்.ஏக்கள் தரப்பிலும், தாங்கள் அப்பாவிகள் என்றும், எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை என்றும், குறிப்பிட்ட அந்த சொத்து கோயிலுக்குச் சொந்தமானது என்று நிரூபித்தால், கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கோயில் நிலத்தை அபகரித்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட எவரையும் தப்பவிட மாட்டோம் என புதுச்சேரி அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. பின்னர், காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி, கோயில் சொத்து தனியாருக்கு விற்கப்பட்டதில், அரசு ஊழியர்களுக்கும் தொடர்பு இருப்பது குறித்து அதிர்ச்சி தெரிவித்தார்.

மேலும், குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிபதி, புதுச்சேரி அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதைச் சுட்டிக் காட்டி, விசாரணையை தொடர உத்தரவிட்டார். மேலும், மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏக்கள், இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவதை சகித்துக் கொள்ள முடியாது என எச்சரித்தார்.

பொதுச்சொத்தான கோயில் சொத்தை பாதுகாக்க வேண்டியது எம்.எல்.ஏக்களின் கடமையும் கூட என்பதால், கோயிலுக்குச் சொந்தமான நிலமாக இருந்தால் உடனடியாக கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், மேலும் இருவரும் இது குறித்து சிபிசிஐடி-இன் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:"நாடாளுமன்றம் ஒரு பொம்மையாக மாறி முழு அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு செல்ல நேரிடலாம்" - திருச்சி சிவா பரபரப்பு பேச்சு

ABOUT THE AUTHOR

...view details