சென்னை:சாலை நடுவில் வைக்கப்பட்ட விளம்பரப் பலகை விழுந்து இளம்பெண் உயிரிழந்தது, விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்க கொடிக்கம்பம் அமைத்தபோது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தது போன்ற சம்பவங்களை சுட்டிக்காட்டி, விதிகளை மீறி விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்குகள், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கா புர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று (செ.7) விசாரணைக்கு வந்தது.
அப்போது, டிஜிட்டல் பேனர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் பேனர் கலாச்சாரம் ஒழிக்கப்பட்டுள்ளதாகவும், விதிகளை மீறி செயல்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக பணியிடை நீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், இந்த சம்பவங்கள் தொடர்பாக பதியப்பட்ட குற்ற விபரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்றனர். அனுமதி பெற்று வைக்கப்படும் பேனர்கள், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக வைக்கப்படுவதாக கூறிய நீதிபதிகள், விழுப்புரத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, கட்சிகளின் பெயரில் கொடிக்கம்பங்கள் அமைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சித் தலைமை அறிவிக்க வேண்டும் என்றனர்.