சென்னை:சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கோவிந்தராஜப் பெருமாள் கோயிலுக்குப் பிரம்மோற்சவம் நடத்தக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில், கோவிந்தராஜப் பெருமாள் சன்னதி உள்ளது. ஆழ்வார்களால் பாடப்பெற்ற இந்த கோயிலை நிர்வாகம் செய்யத் தனி நிர்வாக குழு உள்ளது. பொது தீட்சிதர்களின் பாரபட்ச போக்கு காரணமாக கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் கடந்த 50 ஆண்டுகளாகப் பிரம்மோற்சவம் நடத்தப்படவில்லை எனக் கூறி, சிதம்பரத்தைச் சேர்ந்த எம்.என்.ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், நடராஜர் கோயிலில் சைவ மற்றும் வைணவ பிரிவுகளுக்கிடையே ஒரு சுமுகமான சூழல் இல்லாததால் பிரம்மோற்சவ விழா நடத்த முடியவில்லை எனவும், அதற்குக் காரணம் பொது தீட்சிதர்கள் தான் எனவும் தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.கனகராஜ், கோவிந்தராஜப் பெருமாள் கோயிலுக்குப் பிரம்மோற்சவம் நடத்தக் கோரி தமிழக அரசுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து நீதிபதிகள், வழக்கு குறித்து இந்து அறநிலையத் துறையினர், மாவட்ட ஆட்சியர் மற்றும் பொது தீட்சிதர்கள் குழு ஆகியோர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையைத் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:அமலாக்கத்துறை அதிகாரி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு..!