சென்னை: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்தின் ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான பண்டாரா சன்னதி தாக்கல் செய்துள்ள மனுவில், 1614ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி நாயக்கர் மன்னர் ஒருவரால் 1,008 ஏக்கர் 34 சென்ட் பரப்பளவு கொண்ட சிவந்திபுரம் கிராமத்தையே ஆதீனத்துக்கு நன்கொடையாக கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
பின்னர், 1864ஆம் ஆண்டு இனாம் ஆணையரிடம் முறையாக பதிவு செய்து, 1901ஆம் ஆண்டு வரை ஆதீனத்தின் நேரடி மேற்பார்வையில் இருந்ததாகவும், தமிழ்நாடு பொது அறக்கட்டளை சட்டம் வந்த பின்னர் அந்த கிராமம் முழுவதும் உள்ள நிலம் பலருக்கு குத்தகைக்கு விடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு 1963ஆம் ஆண்டு கொண்டு வந்த இனாம் சொத்துக்கள் ஒழிப்பு மற்றும் ரயத்துவாரி சட்டத்தை எதிர்த்து செட்டில்மென்ட் அதிகாரியிடம் முறையிட்டு, 1980ஆம் ஆண்டு ஆதீனத்தின் பெயரில் ரயத்துவாரி பட்டா வழங்கப்பட்டதாகவும், அதற்கு 592 குத்தகைதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எதிர்ப்பாளர்கள் நிலத்தில் பயிரிடும் குத்தகைதாரர்கள்தான் என்றும், நிலத்தின் மீது உரிமை கோர முடியாது என்றும் உத்தரவிட்டதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இரு தரப்பும் மாறி மாறி தொடரப்பட்ட வழக்குகளை உயர் நீதிமன்றம் விசாரித்தபோது, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தென் மாவட்டங்களுக்கான பொறுப்பு உதவி செட்டில்மென்ட் அதிகாரி விசாரிப்பார் என்று கடந்த 2016ஆம் ஆண்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக சுட்டிக் காட்டியுள்ளார்.
விசாரணைக்கு அழைப்பு வரும் என காத்திருந்ததாகவும், ஆனால் ஆதீனம் தரப்பில் எந்த ஒரு ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை என காரணம் கூறி, தங்கள் கோரிக்கை 2015ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதியே நிராகரிக்கப்பட்டது தெரிய வந்ததாகவும் கூறியுள்ளார்.