தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூன்று மாதங்களில் 900 தள்ளுவண்டி கடைகளை உற்பத்தி செய்து வழங்காத தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் - கடற்கரை

mhc order to manufacture and deliver 900 trolley shops
mhc order to manufacture and deliver 900 trolley shops

By

Published : Dec 4, 2020, 5:17 PM IST

Updated : Dec 4, 2020, 5:33 PM IST

17:10 December 04

சென்னை:மெரினா கடற்கரைக்கு மூன்று மாதங்களில் 900 தள்ளுவண்டி கடைகளை உற்பத்தி செய்து வழங்காத தனியார் நிறுவனங்களுக்கு 50 சதவீத தொகை வரை அபராதமாக விதிக்க வேண்டுமென மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கில், தள்ளுவண்டி கடைகள் அமைப்பது தொடர்பாக கோரப்பட்ட டெண்டரை இரு நிறுவனங்களுக்கு பகிர்ந்து வழங்குவது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சென்னை மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று (டிச.03) உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவின்படி காணொலி காட்சி மூலம் ஆஜரான மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், இரு நிறுவனங்களுக்கும் தள்ளுவண்டி கடைகளில் அமைக்கும் பணிகளை வழங்குவது குறித்து விளக்கம் அளித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 900 தள்ளுவண்டி கடைகளை இரு நிறுவனங்களுக்கும் தலா 450 கடைகள் வீதம் பகிர்ந்து அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இது சம்பந்தமான உத்தரவை வரும் 7ஆம் தேதி பிறப்பிக்க வேண்டும் எனவும், மூன்று மாதங்களில் 900 கடைகளையும் உற்பத்தி செய்து வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், கடைகள் உற்பத்தி செய்து வழங்குவதில் தாமதத்தைத் தவிர்க்க, தாமதமாகும் நாட்களுக்கு ஏற்றவாறு குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு மேல் தாமதமானால் கடையின் மதிப்பில் 10 சதவீத தொகையையும், அதிகபட்சமாக 15 நாட்களுக்கு மேல் தாமதமானால் 50 சதவீத தொகையையும் பிடித்தம் செய்து கொள்ளவும் மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.

கடைகள் அமைக்கும் பணிகளை மாதம்தோறும் ஆய்வு செய்வதாக குறிப்பிட்ட நீதிபதிகள், மூன்று மாதங்களுக்குப் பிறகு மெரினா கடற்கரையில் 900 தள்ளுவண்டி கடைகள் தவிர வேறு எந்த கடைகளுக்கும் இடமளிக்கக்கூடாது என்றும், இந்த 900 கடைகளை குலுக்கல் மூலம் வினியோகிப்பது தொடர்பாக நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் மாநகராட்சிக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜனவரி 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Last Updated : Dec 4, 2020, 5:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details