சென்னை:சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான பாமகவைச் சேர்ந்த சதாசிவத்தின் மகன் சங்கர். இவருக்கும், சேலம் சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த மனோலியாவுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில், சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் மனோலியா புகார் ஒன்றை அளித்தார். அதில், திருமணத்தின்போது மணமகன் வீட்டிற்கு வரதட்சணையாக 200 சவரன் நகை, 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார், 20 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொடுத்துள்ள நிலையில், மேலும் வரதட்சணை கேட்டு கணவர் சங்கர், மாமனார் சதாசிவம், மாமியார் பேபி, நாத்தனார் ஆகியோர் கொடுமைப்படுத்துவதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரில், சட்டப்பேரவை உறுப்பினர் சதாசிவம் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சட்டப்பேரவை உறுப்பினர் சதாசிவம், மகன் சங்கர் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.