சென்னை: சென்னை கபாலீஸ்வரர் கோயில் மயில் சிலை காணாமல் போன விவகாரம் தொடர்பாக பிரபல தொழிலதிபர் வேணு சீனிவாசனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யக் கூடாது என ரங்கராஜன் நரசிம்மனுக்கு தடை விதிக்க வேண்டும் என்று 2022 செப்டம்பர் 2ஆம் தேதி உத்தரவு பிறப்பித்த நிலையில், இந்த உத்தரவை மீறி தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் விரும்பத்தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி வருவதாகக் கூறி வேணு சீனிவாசன், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் ரங்கராஜன் நரசிம்மன், மன்னிப்பு கோரியது தொடர்பாக மற்றொரு X வலைத்தளப் பதிவையும் அவர் பதிவு செய்திருக்கிறார். இது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்று வேணு சீனிவாசன் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க:ஜப்பானைச் சுற்றிப் பார்க்க போரேன்.. அமைச்சர் அன்பில் மகேஷுடன் கல்விச் சுற்றுலாவை ரசித்து வரும் அரசுப் பள்ளி மாணவர்கள்!
இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்றத்தின் கண்ணியத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளதாகக் கூறி, ரங்கராஜன் நரசிம்மனுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதித்து அந்தத் தொகையை நான்கு வாரங்களில் செலுத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், பாலியல் தொழிலாளர்களைக் குறிப்பிடக் கூடிய வார்த்தையைப் பயன்படுத்தியது ஆட்சேபத்துக்குரியது என்று தெரிவித்த நீதிபதிகள், சனாதனத்தின் பாதுகாவலர் என்று கூறிக்கொள்ளும் நபர், சமூக வலைத்தளங்களில் விரும்பத்தகாத வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்றும், அதை ஊக்குவிக்கவும் முடியாது என்றும் தெரிவித்தனர்.
இதனையடுத்து, இளைஞர்கள், வயதானவர்கள் என அனைவரும் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் நாகரிகத்தையும், கண்ணியத்தையும் பேண வேண்டிய அவசியத்தை உணர்த்த, இரண்டு வாரங்களுக்கு சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:இறந்தும் உயிர் வாழும் ஆசிரியை.. இந்து பெண்ணின் இதயம் இஸ்லாமிய நபருக்கு பொருத்தம்.. வாழும் மனிதநேயம்!