தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு; வழக்கிலிருந்து விலகிய நீதிபதி சக்திவேல்! - நீதிபதி சக்திவேல்

Senthil Balaji Bail: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க நீதிபதிகள் மறுத்த நிலையில், வழக்கிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சக்திவேல் அறிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2023, 5:02 PM IST

சென்னை:சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். மனுவை எந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்பதில் அமலாக்கத்துறை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றமான சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளின் விசாரணையை நடத்தும் சிறப்பு நீதிமன்றம் ஆகியவற்றிற்கு இடையே தெளிவில்லாத சூழல் நிலவுகிறது.

ஜாமீன் மனுவை விசாரிக்க அதிகாரம் இருக்கிறதா என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று வருமாறு செந்தில் பாலாஜிக்கு எம்.பி., எம்.எல்.ஏக்கள் வழக்குகள் தொடர்பான நீதிமன்றம் (ஆகஸ்ட் 30) அறிவுறுத்தி இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தீர்வு காண தாக்கல் செய்யப்பட்ட செந்தில் பாலாஜி மனுவை, அவசர வழக்காக விசாரிக்க கோரி மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் முறையிட்டார்.

அப்போது, செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் இருந்து நீதிபதி ஆர்.சக்திவேல் ஏற்கனவே விலகிய நிலையில், இந்த முறையீட்டு எப்படி ஏற்பது என நீதிபதி எம்.சுந்தர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, மாற்று அமர்வான நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் வழக்குகளை விசாரிக்கவில்லை என்பதால் இந்த அமர்வில் முறையிடுவதாகவும், நிர்வாக ரீதியான உத்தரவை பிறப்பித்தால கூட போதுமானது என தெரிவித்தார்.

ஜாமீன் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்பது குறித்து தலைமை நீதிபதிதான் முடிவு செய்வார் என கூறிய நீதிபதி எம்.சுந்தர், இந்த வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதியிடம் முறையிடும்படி அறிவுறுத்தினார். ஆனால், தங்களது கோரிக்கையை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அடங்கிய அமர்வில் (செப். 1) முறையிட உள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வு, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க மறுத்த நிலையில், வழக்கிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக நீதிபதி சக்திவேல் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க:"நீட் தேர்வுக்கு எதிராக ஒவ்வொருவரும் உதயநிதியாக மாற வேண்டும்" - அமைச்சர் உதயநிதி ஆவேசம்!

ABOUT THE AUTHOR

...view details