தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Senthil balaji: செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு! - அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் குழப்பம்

செந்தில் பாலாஜியை சட்டவிரோதக் காவலில் வைத்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில், இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்புகளால் மூன்றாவது நீதிபதி விசாரணைக்காக தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

mhc judges gave a different verdict in the Habeas corpus petition filed by Senthil Balajis wife The case referred to the Chief Justice
செந்தில் பாலாஜி

By

Published : Jul 4, 2023, 10:47 AM IST

Updated : Jul 4, 2023, 12:50 PM IST

சென்னை:அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் இன்று (ஜூலை 4) நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரதச் சக்கரவர்த்தி அமர்வு தீர்ப்பு வழங்கினர்.

அப்போது மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டதாகவும், அதை பெற்றுக்கொள்ள செந்தில் பாலாஜி மறுத்ததாகவும், கைது தொடர்பாக உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்ததாகவும் அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது. ஆனால், அதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும், இதன் மூலம்
சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது.

மேலும், நாடாளுமன்றம் இயற்றிய சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தில் காவல் நிலைய அதிகாரிக்கான அதிகாரம் அமலாக்கத் துறையினருக்கு வழங்காத நிலையில், அந்த அதிகாரத்தை நீதிமன்றம் வழங்க முடியாது என்பதால் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப் பிரிவுக்கு அதிகாரமில்லை எனத் தெரிவித்தார்.

அமலாக்கப் பிரிவு தரப்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீதிமன்றக் காவலில் வைத்து, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் செந்தில் பாலாஜி சட்டவிரோதக் காவலில் இல்லை எனவும், நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை எதிர்த்தோ? ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிர்த்தோ? வழக்குத் தொடரவில்லை என்பதால், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல.

செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில் தான் உள்ளாரே தவிர அமலாக்கத்துறை காவலில் இல்லை என்பதால் அவரை ஆஜர்படுத்தி, விடுவிக்கும்படி கோர முடியாது. சட்டவிரோதப் பண பரிமாற்ற தடைச் சட்டத்தில், ஆதாரங்கள் இருந்தால் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனக் கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

உரிய ஆதாரங்கள் இல்லாமல் கைது நடவடிக்கை மேற்கொண்டால் சம்பந்தபட்ட அதிகாரிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கவும், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் சட்டவிரோத பணபரிமாற்றத் தடைச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதால், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட 10 மணி நேரத்துக்குள் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கைதுக்கான காரணங்களும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், செந்தில் பாலாஜி அதைப் பெற மறுத்து விட்டார் என்றார்.

செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலிலும், அமலாக்கத் துறை காவலிலும் வைத்து விசாரிக்க அனுமதித்து அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இயந்திரத்தனமானதல்ல. அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்த பிறகே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. காவலில் வைத்து விசாரிக்க அமர்வு நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளால், செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் வைத்து விசாரிக்க இயலவில்லை. முதல் 15 நாட்களில் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோராவிட்டால் அமலாக்கப் பிரிவு தனது கடமையை செய்யத் தவறியதாகி விடும்.

ஆரம்பத்தில் இருந்து செந்தில்பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. சம்மன் அனுப்பினாலும் பதில் இல்லை. கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை எனவும், அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது திமுகவில் அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜிக்கு எதிராக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறமுடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்கில் ஆதாரங்களும், அடிப்படை முகாந்திரமும் இருப்பதாக நீதிமன்ற உத்தரவுகள் தெரிவித்துள்ளதால், செந்தில் பாலாஜி சிகிச்சையில் உள்ளதால் அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை எனவும், அவர் சிகிச்சைப் பெறும் காலத்தை நீதிமன்ற காவலில் உள்ள காலமாக கருதக் கூடாது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு போலீசாரின் அதிகாரம் வழங்காததால் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரமில்லை எனக் கூற முடியாது, சட்ட விரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க உச்ச நீதிமன்றமே அனுமதி வழங்கியுள்ளதால், ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருதக் கூடாது எனக் கோர முடியாது. அதற்கு எந்த சட்டத்திலும் வழிவகை செய்யப்படவில்லை. 15 நாட்கள் முடிந்தது, முடிந்தது தான் எனக் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட 15 நாட்களுக்குள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கலாம். கரோனாவாக இருந்தாலும் சரி, பூகம்பமாக இருந்தாலும் சரி 15 நாட்களுக்கு மேல் காவலில் வைத்து விசாரிக்க கோர முடியாது, 15 நாட்கள் முடிந்து விட்டால் உலகம் முடிவுக்கு வந்து விடாது. வழக்கின் புலன் விசாரணையைத் தொடர அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. தற்போதைக்கு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

முகுல் ரோத்தஹி வாதத்துக்கு பதிலளித்து அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, காவலில் வைத்து விசாரிப்பது அமலாக்கத் துறையின் உரிமை எனவும், காவலில் வைத்து விசாரிக்க 8 நாட்கள் அனுமதி வழங்கப்பட்ட போதும் செந்தில் பாலாஜியிடம் விசாரிக்க முடியாத காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் காலத்தை நீதிமன்றக் காவல் காலமாக கருதக் கூடாது எனக் கேட்டுக் கொண்டார்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை நிலையில் இன்று (ஜூலை 4) நீதிபதிகள் தங்கள் தீர்ப்பைத் தெரிவித்தனர். அதன்படி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தீர்ப்பை வழங்கிய நீதிபதி நிஷா பானு, ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான். அமலாக்கத்துறை சட்ட விதிகளின் படி கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. அதனால் செந்தில் பாலாஜியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தீர்ப்பளித்தார்.

நீதிபதி நிஷா பானுவின் உத்தரவை நீதிபதி பரத சக்கரவர்த்தி ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மதுரையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் தீர்ப்பை வழங்கிய நீதிபதி பரத சக்கரவர்த்தி, ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது இல்லை. நீதிமன்ற காவலில் உள்ளதை கருத்தில் கொண்டு சட்ட விரோதக் காவலில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டதாக கருத முடியாது என தெரிவித்து ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தார்.

மேலும், செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்த காலத்தை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டதாக கருத முடியாது. மருத்துவர்கள் அனுமதிக்கும் வரை செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை தொடரலாம் என உத்தரவிட்டுள்ளார். உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால், மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் மூன்றாவது நீதிபதி வழங்கும் தீர்ப்பே இறுதியானதாக கருதப்படும்.

இதையும் படிங்க: 'ஆட்சிக்கு வந்து ரெண்டு வருஷமாகியும் எந்த லாபமும் கிடைக்கல' - ஆர்எஸ் பாரதி சர்ச்சை பேச்சு!

Last Updated : Jul 4, 2023, 12:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details