கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வீரசோழபுரம் என்னுமிடத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயில்லுக்கு சொந்தமான இடத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது.
ஆனால், கோயில் நிலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட தடை விதிக்க கோரி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன், நரசிம்மன் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கோயில் நிலத்திற்கு இழப்பீடு நிர்ணயித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கை நகல் தங்களுக்கு வழங்கப்படவில்லையென மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதிப்பீடு செய்யப்பட்ட அறிக்கையை மனுதாரருக்கு வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
இதற்கிடையில், ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு ஒப்பந்தம் பெற்றுள்ள நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "சுற்றுச்சூழல் உள்ளிட்ட அனுமதிகளை பெறாமல் கட்டுமான பணிகளை தொடர கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அனுமதி கிடைக்கும் பட்சத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் கட்டுமான பணிகளை மேற்கொள்ள இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:ரவிச்சந்திரன் விடுப்பு வழக்கு - அரசு தரப்பில் தகவல் பெற்று சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!