சென்னை: சென்னையைச் சேர்ந்த ராமச்சந்திரன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 1981ஆம் ஆண்டு உதவி வனக்காப்பாளராகவும், 1989ம் ஆண்டு முதல் வனக்காப்பாளர் பணியைத் தொடர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
காலநிலை மாற்றம் குறித்து முனைவர் பட்டம் பெற்று பல்வேறு நாடுகளுக்கு இந்தியப் பிரதிநிதியாகப் பங்கேற்றிருப்பதாகவும், அண்ணா பல்கலைக்கழகத்தில் காலநிலை மாற்றம் தொடர்பாகப் புதிதாகத் தொடங்கப்பட்ட மையத்திற்கு இயக்குநராக 2008ல் இருந்து 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டதாகவும், பல்கலைக்கழகம் விடுத்த கோரிக்கையை ஏற்று 2011ல் மேலும் 3 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில், தலைமை வனக்காப்பாளராக பதவி உயர்வு வழங்கத் தகுதி இருந்தும், அரசு பதவி உயர்வு வழங்கவில்லை. தனக்குப் பதவி உயர்வு வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி மத்திய நிர்வாகவியல் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் 3 மாதங்களில் தேர்வுக் குழு உரிய முடிவு எடுக்க உத்தரவிட்டது. ஆனாலும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.