சென்னை: புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில், போக்குவரத்து மற்றும் கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் கல்யாணசுந்தரம். இவர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாததால், தமிழகத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறை நடத்திய பத்தாம் வகுப்பு தேர்வில் தனித் தேர்வராக பங்கேற்றார்.
அப்போது, தனித் தேர்வராக பங்கேற்ற கல்யாணசுந்தரம் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து, கல்யாணசுந்தரம் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்தது. அந்த வகையில், இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த திண்டிவனம் நீதிமன்றம், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து கல்யாணசுந்தரம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அப்போது, அந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம், அவரை விடுதலை செய்தது. இதைத் தொடர்ந்து, இந்த தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் போலீசார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார்.
அதன் பின்னர், இந்த வழக்கில் இன்று (டிச. 22) தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், விழுப்புரம் காவல் துறையினரின் மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். கல்யாணசுந்தரம் தற்போது புதுவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:திருநெல்வேலியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு! மழை வெள்ளத்தை சுத்தம் செய்த போது சோகம்!