சென்னை:அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தன் மீது இருந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்த நிலையில், மனு இன்று (ஜூலை 20) விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி அரசியல் போராட்டங்களில் தேவை இல்லாமல் நீதித்துறையை ஏன் இழுக்கிறீர்கள்? எனக் கேள்வியை எழுப்பினர்.
தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகளைக் கண்டித்தும் முன்னாள் அதிமுக அமைச்சர் டி.ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் போராட்டங்களிலும் சாலை மறியலிலும் ஈடுபட்டதை அடுத்து விழுப்புரத்தில் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை செயல்படுத்தக்கோரியும் முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சி.வி. சண்முகம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
இதன் அடிப்படையில் தமிழக காவல்துறையினரால் சி.வி. சண்முகம் மீது 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி மனு அளித்திருந்தார். இந்த மனுக்கள், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தது. சி.வி. சண்முகத்தின் வாதங்களைக் கேட்ட நீதிபதி சில வழக்குகள் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததைச் சுட்டிக்காட்டி, 6 வழக்குகளில் இருந்து ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:மணிப்பூர் பழங்குடியின பெண்கள் விவகாரம்... முக்கிய குற்றவாளி கைது - போலீசார் தகவல்!
இதற்கிடையே மேலும் சில வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டதைச் சுட்டிக்காட்டி 3 வழக்குகளில் விசாரணை நீதிமன்றத்தை நாடி உரிய நிவாரணம் பெறும்படி நீதிபதி அறிவுறுத்தினார். மேலும் ஒரு வழக்கை திரும்பப்பெற அனுமதித்தும் உத்தரவிட்டார். இது தவிர சி.வி.சண்முகம் தாக்கல் செய்த 2 மனுக்களுக்கு 6 வாரங்களில் பதிலளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, பின்னர், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட்டார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் போராட்டம் நடத்தியபோது அவரை சிறையில் அடைத்த நீதிபதி அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்; மிரட்டப்பட்டிருக்கிறார் என சி.வி.சண்முகம் பேசியிருப்பதைச் சுட்டிக்காட்டினார், நீதிபதி.
அதனைப் பற்றி குறிப்பிட்ட நீதிபதி அரசியல் போராட்டங்களில் தேவை இல்லாமல் நீதித்துறையை ஏன் இழுக்கிறீர்கள்? நீதிபதி அச்சுறுத்தப்பட்டிருக்கிறார் மற்றும் மிரட்டப்பட்டிருக்கிறார் என எப்படி கூறமுடியும்? என கேள்வி எழுப்பினார்.மேலும், உங்கள் அரசியலுக்காக நீதித்துறையை இழுக்காதீர்கள் என அதிருப்தி தெரிவித்தார்.
எந்த கட்சியும் நீதிமன்றங்களை பார்ப்பதில்லை எனத் தெரிவித்த நீதிபதி, நீதித்துறையை பொறுத்தவரை ஒரே ஒரு அரசு தான் எனக் குறிப்பிட்டு சில வழக்குகளின் விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டார் நீதிபதி.
இதையும் படிங்க:விலைவாசி விண்ணை தொடுகிறது; சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது: ஆவேசமான ஜெயக்குமார்