சென்னை: மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயன்றதாக, பேராசிரியை நிர்மலா தேவிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் குற்றப்பத்திரிகை நகலைத் தாக்கல் செய்ய, தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயன்றதாகக் கடந்த 2018ஆம் ஆண்டு, அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவிக்கு எதிராக சி.பி.சி.ஐ.டி விசாரிக்கும் வழக்கை, பெண் டி.ஐ.ஜி தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநரால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் சந்தானம் குழு அளித்த அறிக்கையை வெளியிடத் தடைவிதித்து இருந்தது. அதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (டிச.18) விசாரணைக்கு வந்தது.
அப்போது, “இந்த விவகாரம் குறித்து விசாரிக்க விசாகா குழு அமைக்கப்பட்டதா?, பேராசிரியைக்கு எதிராக மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் என்ன நடவடிக்கை எடுத்தது?, குற்ற வழக்கின் விசாரணை நிலை என்ன?, 5 ஆண்டுகளாக இந்த வழக்கில் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அரசு தரப்பில், நிர்மலா தேவி 2018ஆம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும், குற்ற வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், சாட்சி விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, குற்றப்பத்திரிகையின் நகலைத் தாக்கல் செய்ய அரசு தரப்பிற்கும், பேராசிரியை நிர்மலா தேவிக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை குறித்த விவரங்களைத் தாக்கல் செய்ய மதுரை காமராசர் பல்கலைக்கழக தரப்பிற்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையைப் பிப்ரவரி 6ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க:கனமழையால் பாதித்தவர்களுக்கு விரைந்து நிவாரணம் அளிக்க இபிஎஸ் வலியுறுத்தல்