சென்னை:கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, புவனேஸ்வரிபேட்டையில் உள்ள லிட்டில் ப்ளவர் மெட்ரிக் பள்ளியில் சேர்க்கை பெற்ற சுவேதன் என்ற மாணவரிடம், சீருடை, பாட புத்தகங்களுக்காக 11 ஆயிரத்து 977 ரூபாய் கட்டணமாக செலுத்தும்படி பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட போது, எந்த கட்டணமும் இல்லாமல் படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதன்படி வகுப்பில் சேர்த்தபோதும், தனக்கு பாட புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்படவில்லை எனக் கூறி, மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் அளித்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தனது மனுவை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி, மாணவர் சார்பில் அவரது தந்தை மகாராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை இன்று (மே 20) விசாரித்த நீதிபதி தண்டபாணி, 'கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களின் கல்விக்கட்டணம் மட்டுமல்லாமல் கல்வி கற்கத் தேவையான பொருட்களுக்கான கட்டணத்தையும் மாநில அரசு ஏற்க வேண்டும்' என கூறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.