சென்னை:மதுரை வடக்கு கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 5.90 ஏக்கர் நிலத்தை பாண்டியன் ஹோட்டல் நிறுவனத்துக்கு 1968ஆம் ஆண்டு ஒதுக்கியது. 25 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட இந்த நிலத்துக்கான குத்தகை காலம் 2008ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதையடுத்து, நிலத்தின் சந்தை மதிப்பின் அடிப்படையில் வாடகையை நிர்ணயித்த அரசு, 36 கோடியே 58 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வாடகையை செலுத்தாவிட்டால், நிலம் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என 2015ஆம் ஆண்டு மதுரை வடக்கு தாலுகா தாசில்தாரர் உத்தரவு பிறப்பித்தார்.
இதை எதிர்த்து பாண்டியன் ஹோட்டல் நிறுவனம், 2015 ஆம் ஆண்டு தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், குத்தகை காலம் முடிந்த பின், அரசு நிர்ணயித்த வாடகையை செலுத்தாமல், 300 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தில், 14 ஆண்டுகள் அனுமதியின்றி ஹோட்டல் நடத்தி அதிக லாபம் அடைந்துள்ளதாக கூறி, பாண்டியன் ஹோட்டல் நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.