kalakshetra sexual Harassment case: சென்னை: கலாசேத்திரா அறக்கட்டளையின் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியின் (ஆர்.டி.சி.எஃப்.ஏ) ஏழு மாணவர்கள் அறக்கட்டளையின் உள் குழுவை மறுசீரமைக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியதை அடுத்து, கல்லூரியில் நடந்த பாலியல் தொல்லைச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க விசாரணைக் குழுவை நியமிப்பது குறித்து, விளக்கமளிக்குமாறு கல்லூரி அறக்கட்டளைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கலாசேத்திரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பின்னணியில், குழுவில் கலாசேத்திரா அறக்கட்டளை இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் இடம் பெறக்கூடாது எனவும், குழுவில் மாணவிகளின் பிரதிநிதிகள், பெற்றோரின் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்றும் கோரி கல்லூரி மாணவிகள் ஏழு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
தங்கள் அடையாளத்தை வெளியிடாமல் இந்த வழக்கை நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரியுள்ள மாணவிகள், தங்கள் விவரங்களை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். கல்லூரியில் மாணவிகளுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர கலாசேத்திரா அறக்கட்டளை தவறிவிட்டதாகவும், பாலியல் தொல்லைகள் குறித்துப் புகார் தெரிவித்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாலியல் தொல்லை தடுப்புக் கொள்கையை வகுக்கும் சட்டப்பூர்வ கடமையில் இருந்தும் கலாசேத்திரா தவறி விட்டதாகவும், மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பாலியல் தொல்லை குற்றச்சாட்டு குறித்து மாணவிகள் புகார் அளித்துள்ள நிலையில், தானாக முன்வந்து விசாரணை நடத்தக்குழுவை அமைத்தது சட்டவிரோதமானது எனவும், மாணவிகளின் புகார் மீது விசாரணை நடத்த அக்கறை காட்டாதது பாரபட்சமானது எனவும் கூறப்பட்டுள்ளது.
புகார் அளித்த மாணவிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என கலாசேத்திராவுக்கு தடை விதிக்க வேண்டும், பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள உள் விசாரணைக் குழுவில், மாணவிகள் மற்றும் பெற்றோரின் பிரதிநிதிகளை சேர்த்து மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
பாலியல் தொல்லை அளித்தவர்கள் வளாகத்திற்குள் நுழையவும், மாணவிகளிடம் கலந்துரையாடவும் தடை விதிக்கவேண்டும், கலாசேத்திரா விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய தமிழ்நாடு மகளிர் ஆணையம், தனது அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். பணியிடங்களில் பெண்களுக்குப் பாலியல் தொல்லை தடுப்புச் சட்டம், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பல்கலைக்கழக மானியக் குழு சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் அடிப்படையில் கலாசேத்திராவில் பாலியல் தொல்லைகளை தடுப்பது குறித்த கொள்கையை வகுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.