சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் கடந்த 2009ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி ஆனந்தகுமார் என்பவர் கடையில் பட்டாசு வெடித்து, பெரிய தீ விபத்து ஏற்பட்டு, அதில் 32 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் என தமிழக அரசு நிவாரணம் வழங்கியது.
இதில் விபத்தில் உயிரிழந்த 27 பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்பதால், அந்த மாநில அரசு 27 பேருக்கு தனியாக தலா ஒரு லட்சம் நிவாரணம் வழங்கியது. இந்த இழப்பீடு போதுமானதல்ல என்றும், தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி பாதிக்கப்பட்ட 32 பேரின் குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, உரிமம் இல்லாமல் பட்டாசு கடை நடத்தப்பட்டுள்ளது. அதனால் பட்டாசு கடை உரிமையாளர் ஆனந்தகுமாரும், அரசும் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறி, உயிரிழந்தவர்களின் வயது, வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில், 6 லட்சம் முதல் 18 லட்சம் வரை இழப்பீடு நிர்ணயித்து, 32 பேரது குடும்பத்துக்கு மொத்தம் 2 கோடியே 76 லட்சத்து 56 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் எனவும், அதில் தமிழக அரசும், மற்றும் கடை உரிமையாளர் ஆனந்தகுமாரும் தலா 50 சதவீதத்தை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.
இதையும் படிங்க:“செப்.12-க்குப் பிறகு தமிழகத்திற்கு நீர் திறந்து விட சாத்தியமில்லை” - கர்நாடக அரசு
இந்த உத்தரவை எதிர்த்து பட்டாசுக்கடை உரிமையாளர் ஆனந்தகுமார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருஷ்ணகுமார், பாலாஜி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இழப்பீட்டுத் தொகையில் 50 சதவீதத்தை வழங்க வேண்டுமென்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று ஆனந்தகுமார் தரப்பில் வாதிடப்பட்டது.