தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் அச்சத்தால் உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு: சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Sep 14, 2020, 1:57 PM IST

Updated : Sep 14, 2020, 3:03 PM IST

13:51 September 14

நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது, அந்த தற்கொலைகளை அரசு ஊக்குவிப்பது போல உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் கடந்த 2017ஆம் ஆண்டு அரியலூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு தொடர்பாக நிகழ்ந்த முதல் உயிரிழப்பு அதுதான். இந்நிலையில், கடந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் இடம்கோருவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருத்திகா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், நீட் தேர்வு தோல்வியால் ஏற்படும் மரணங்களை தடுக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வுக்கு முன்பாக உரிய பயிற்சிகள் அளிக்க வேண்டும், தேர்வு பயத்தை போக்கி சிபிஎஸ்இ தேர்வு வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் நடத்தும் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக நீட் தேர்வு பயத்தால் தமிழ்நாட்டில் நான்கு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வில் வழக்கறிஞர் சூரியபிரகாசம் முறையிட்டார்.

அப்போது, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கிருத்திகா தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாததால் மாணவர்களின் தற்கொலைகள் தொடர்ந்து வருவதாகவும், மாணவர்களின் தற்கொலைகளை தடுக்கும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தோல்வி அடைந்து விட்டதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத தமிழ்நாடு அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதும், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதும் அந்த தற்கொலைகளை அரசே ஊக்குவிப்பது போல உள்ளதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத தமிழ்நாடு அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வழக்கறிஞர் சூரியபிரகாசத்திற்கு அனுமதியும் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க:'டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயரை சூட்ட அரசு பரிசீலிக்க வேண்டும்'

Last Updated : Sep 14, 2020, 3:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details