தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா? - செந்தில் பாலாஜி வழக்கில் ட்விஸ்ட்! - senthil balaji

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததை எதிர்த்த வழக்கில், ஆளுநருக்கு எப்படி உத்தரவிட முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா? - செந்தில் பாலாஜி வழக்கில் திருப்பம்
ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா? - செந்தில் பாலாஜி வழக்கில் திருப்பம்

By

Published : Jul 7, 2023, 12:40 PM IST

சென்னை: சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள செந்தில் பாலாஜியின் வசம் இருந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன. அதேநேரம், செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் ஏற்க மறுத்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என கடந்த ஜூன் 16ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.எல்.ரவி வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அதே போன்று, செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி, கொளத்தூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் ஆகியோர் கோ வாரண்டோ வழக்குகளையும் தாக்கல் செய்திருந்தனர்.

இதனிடையே, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்வதாக கடந்த ஜூன் 29ஆம் தேதி மாலையில் உத்தரவு பிறப்பித்த ஆளுநர், அடுத்த சில மணி நேரங்களில் அந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக, தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்த நிலையில், எம்.எல்.ரவி தாக்கல் செய்துள்ள புதிய மனுவில், அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை நிறுத்தி வைத்த தமிழ்நாடு ஆளுநர் ரவியின் கடிதத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார். அரசியல் சாசனத்தின்படி ஆளுநர் எடுத்த முடிவை, மறுபரிசீலனை செய்ய முடியாது என்றும், நீதிமன்றம்தான் அதை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியும்.

ஆளுநர் முடிவு எடுத்த பிறகு, வேறு யாருடனும் கலந்து ஆலோசிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் மனுவில் சுட்டிக்காட்டி உள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ள போதும், அந்த உத்தரவை நிறுத்தி வைக்க அதிகாரமில்லை எனவும், மத்திய உள்துறை அமைச்சர், அட்டர்னி ஜெனரல் ஆலோசனை பெற நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஆளுநருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியுமா? முன்னுதாரண தீர்ப்புகள் ஏதேனும் உள்ளதா எனவும், அவற்றை தாக்கல் செய்யும்படியும் மனுதாரருக்கு உத்தரவிட்ட தலைமை நீதிபதி அமர்வு, அனைத்து தரப்பும் தீர்ப்புகளை பகிர்ந்து கொள்ளவும் உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தது.

அப்போது, செந்தில் பாலாஜி தொடர்ந்து அமைச்சராக நீடிக்கிறார் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டபோது, அதன் மூலம் மனுதாரர் எப்படி பாதிக்கப்படுகிறார் என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு மக்கள் வரிப்பணத்தில் அவருக்கு ஊதியம் வழங்கப்படுவதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பதிலளித்தார்.

அவர் எம்எல்ஏவாகவும் இருக்கிறாரே என தலைமை நீதிபதி தெரிவித்தார். இதேபோல, செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கோரிய ஜெ.ஜெயவர்த்தன், எம்.எல்.ரவி, ராமச்சந்திரன் ஆகியோர் தாக்கல் செய்த கோ வாரண்டோ வழக்குகளின் விசாரணையையும் அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:செந்தில் பாலாஜி வாய் திறந்தால் திமுக ஆட்சி அவ்வளவுதான் - எடப்பாடி பழனிசாமி

ABOUT THE AUTHOR

...view details