சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, "இன்று காலை அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இவை வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த மூன்று தினங்களில் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
வெப்பச் சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தென்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக தென் கடலோர மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாக நவ.4, 5 ஆகிய தேதிகளில் அந்தமான் கடல் பகுதிகளுக்கும், நவம்பர் 6,7,8 ஆகிய தேதிகளில் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறைக் காற்று வீச வாய்ப்பிருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது.