சென்னை: தமிழ்நாட்டில் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (பிப்.1) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை - திரிகோணமலையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென்கிழக்கே சுமார் 420 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இதுமெதுவாக மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு 08:30 மணி அளவில் இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக் கூடும்.
இதன் காரணமாக, தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (பிப்.1) அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை (TN Rains) பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பிப்.2ஆம் தேதி ஓரிரு இடங்களிலும் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பிப்.3ஆம் தேதி ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பிப்.4ஆம் தேதி லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பிப்.5ஆம் தேதி வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.