சென்னை:சேப்பாக்கம் ஓமந்தூரார் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் 24ஆவது மெகா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று(மார்ச் 12) ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், "தமிழ்நாடு முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. இதுவரை 91.77% பேர் முதல் தவணையும், 73% பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். நோய் குறைந்துவிட்டது என்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தாமல் இருக்க வேண்டாம்.
உயிரிழப்பு இல்லை
தமிழ்நாட்டில் 1461 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துகளை பின்பற்றியதால் நேற்று (மார்ச் 11) கடந்த ஏப்ரல் 30, 2020க்கு பிறகு பூஜ்யம் என உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
சீனாவில் சாங்சுன் நகரில் புதிய வகை கரோனா வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கஜினி முகமது போல் எத்தனை முறை கரோனா படை எடுத்தாலும் நாம் அதை தோற்கடிப்போம்.
இரண்டாம் அலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இருந்தது. அப்போது அதிக அளவில் தடுப்பூசி செலுத்தியதால்தான், தற்போது கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. வருங்காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறையலாம், எனவே தகுதியானவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி கிராமப்புறங்களில் இரண்டு தெருக்களில் மட்டுமே மூன்றுக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் உள்ளனர். நகர்புறங்களில் இரண்டு இடங்களில் மட்டுமே மூன்றுக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் உள்ளனர். டெங்கு தாக்குதலும் குறைந்து வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு 10 முதல் 20 நபர்கள் மட்டுமே டெங்குவால் பாதிக்கப்படுகின்றனர். எலி காய்ச்சல், மூளை காய்ச்சல் உள்ளிட்ட மற்ற நோய்களையும் கண்காணித்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 20 நாள் சிறை வாசத்திற்கு பின் ஜெயக்குமார் விடுதலை.. விண்ணை பிளந்த அண்ணன் DJ வாழ்க கோஷம்..