சென்னை: வருகின்ற 19 ஆம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தியின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் அன்றைய தினம் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய நலத்திட்ட உதவிகள் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை நடத்தினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் துணை தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி, ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் ஹசன் மெளலானா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் முன்வைக்கப்படும் ஆலோசனைகள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என நிர்வாகிகள் கூறினர். முன்னதாக நேற்று (ஜூன் 15) அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு பேனர் வைப்பது, கேக் வெட்டுவது பட்டாசு வெடிப்பது, இனிப்புகள் வழங்குவது போன்ற கொண்டாட்டங்களில் தொண்டர்கள் ஈடுபடக்கூடாது.
அதைத் தவிர்த்து பொது மக்களுக்கு உதவும் வகையில் நலத்திட்டங்கள் வழங்குவது, மருத்துவ உபகரணங்கள் வழங்குவது, ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மரியாதை நிமிர்த்தமாக ஓபிஎஸ்யைச் சந்தித்த முக்கிய நிர்வாகிகள்!