சென்னை, டிஎம்எஸ் வளாகத்தில் அமைந்திருக்கும் கரோனா கட்டளை மையத்தை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், "டிஎம்எஸ் வளாகத்தில் அமைத்திருக்கும் கரோனா கட்டளை மையத்தில் ஆக்ஸிஜன் படுக்கைகள் எங்கு உள்ளன என்பதை அறிய முடியும். இது ஐஏஎஸ் அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
’104’ எண்ணுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு மருத்துவர்கள் பதிலளித்து, நோயாளியின் உடல் நிலையை அறிந்து அவர்களுக்கு ஏற்றார்போல் உதவி செய்து வருகின்றனர். ஏதாவது மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருந்தால் கரோனா கட்டளை மையத்தின் வழியாக கும்மிடிப்பூண்டியில் அமைந்திருக்கும் ஆக்ஸிஜன் சேமிப்புக் கிடங்குக்குத் தகவல் தெரிவித்து அங்கிருந்து ஆக்ஸிஜன் வருவதற்கு அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.
இந்த கரோனா கட்டளை மையத்தில் இருப்பது போல மாநகராட்சி மண்டல அலுவலகத்திலும் ஏற்பாடு செய்ய முடிவு எடுத்துள்ளோம். மக்களுக்கும் நோயாளிகளுக்கும் தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சியும் சுகாதாரத் துறையும் தொடர்ந்து எடுத்து வருகிறது.
இதற்கு முன்பாக கரோனா நோயாளிகளுக்கு மட்டுமே மெடிக்கல் கிட்கள் (Medical kit) வழங்கப்பட்டு வந்தன. ஆனால், இன்று (மே.12) காலை முதல் சிறு அறிகுறிகளுடன் கரோனா பரிசோதனை மையத்திற்கு வருபவர்களுக்கும் மெடிக்கல் கிட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கிட்டத்தட்ட 30 ஆயிரம் மெடிக்கல் கிட்கள் அனைத்து மண்டலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. பரிசோதனை செய்து அதற்கு முடிவு வருவதற்குள் நோய் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால், அவர்கள் பரிசோதனை செய்யும்போதே மருந்துகள் வழங்கி விட்டால் நோய் பரவும் அபாயம் சற்று குறையும் என நம்புகிறோம்.
சிறு அறிகுறி உள்ளவர்கள் சித்த மருத்துவமனையில் சிகிச்சைப் பெறலாம். இந்த மெடிக்கல் கிட்டில் முகக்கவசம், கபசுரக் குடிநீர், ஜிங்க் மாத்திரை உள்ளிட்டவைகள் இருக்கும்" எனத் தெரிவித்தார்.