கரோனா பெருந்தொற்று காரணமாக நீட் தேர்வு தாமதமாக நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகின. இளநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வுப் பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன.
தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்க சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திவந்த நிலையில், அண்மையில் அதற்கு ஒப்புதல் அளித்தார்.
இதைத்தொடர்ந்து, எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. எனவே, ஓரிரு நாள்களில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு மருத்துவப்படிப்புகளுக்கான கலந்தாய்வை ஆன்லைன் மூலம் நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த கல்வியாண்டிலே, ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், நேரடியாகவே கலந்தாய்வு நடத்தப்பட்டது.
நவம்பர் இரண்டாம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு பேசியபோது, "மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடத்துவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்ப விநியோகம், ஓரிரு நாளில் தொடங்கும். தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஆன்லைன் அல்லது நேரடியாக நடத்த மருத்துவ கல்வி இயக்குநரகம் தயாராக உள்ளது" என்றார்.
இதையும் படிங்க:’நடப்பாண்டு மருத்துவக் கலந்தாய்வில் கட் ஆஃப் மதிப்பெண்கள் அதிகரிக்கும்’