மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு கடந்த 3ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மருத்துவப்படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் நவம்பர் 16ஆம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையில் நடைபெற்று முடிவடைந்தது.
அதில் பல் மருத்துவப்படிப்பில் 6 இடங்கள் காலியாக உள்ளன. தொடர்ந்து சிறப்பு பிரிவினருக்கு 21ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்க 70 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 64 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 58 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பிலும், 2 மாணவர்கள் பிடிஎஸ் படிப்பிலும் இடங்களை தேர்வு செய்தனர். 4 மாணவர்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். அதில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளில் எம்.பி.பி.எஸ்.படிப்பில் 10 பேரும், பி.டி.எஸ். படிப்பில் ஒரு மாணவரும், விளையாட்டு பிரிவில் எம்.பி.பி.எஸ்.படிப்பில் ஏழு மாணவர்களும், பி.டி.எஸ்.படிப்பில் ஒரு மாணவரும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 41 மாணவர்கள் எம்.பி.பி.எஸ் படிப்பினை தேர்வு செய்துள்ளனர்.
பொதுப்பிரிவுக் கலந்தாய்வில் எம்.பி.பி.எஸ்.படிப்பில் 26 அரசு மருத்துவக் கல்லூரியில் 2,747 இடங்களும், 14 தனியார் மருத்துவக் கல்லூரியில் 1,061 இடங்களும், பி.டி.எஸ். படிப்பில் இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 151 இடங்களும், 18 தனியார் மருத்துவக் கல்லூரியில் 985 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
இதனிடையே, மருத்துவக் கல்வி மாணவர்கள் சேர்க்கைக்குழு செயலாளர் செல்வராஜன் வெளியிட்டுள்ள அட்டவணையில், ”எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ்., மருத்துவப்படிப்பில் அரசு மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரி, அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி, தனியார் மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், ராஜாமுத்தையா மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி, கே.கே.நகர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் உள்ள இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும்.