கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 14ஆம் தேதி வரை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில், சாலையோரம் வசிப்பவர்கள், ஏழை மக்களுக்கு தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் சார்பாக உணவு, மளிகைப் பொருள்களை இலவசமாக வழங்கி வருகின்றனர்.
தன்னார்வலர்களின் இந்தச் செயலால் சமூக விலகல் மீறப்படுவதால் மக்களுக்கு நோய் பரவ வாய்ப்புள்ளதாகவும், உணவுப் பொருள்களை வழங்க விரும்பும் நபர்கள் அரசாங்கத்தின் மூலமாக மக்களுக்கு நேரடியாக வழங்கலாம் எனவும் ஏப்ரல் 12ஆம் தேதி அறிவிப்பானை வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பாணையை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தாக்கல் செய்துள்ள மனுவில், "இந்தத் துயரமான நிலையில் இருந்து கோடிக்கணக்கான மக்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கத்தால் மட்டும் இயலாது. அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், பொதுநல ஆர்வலர்கள் ஆகியோர் மனிதாபிமானத்துடன் உணவு, அத்தியாவசியப் பொருள்கள், அவசரகால உதவிகள் ஆகியவற்றை நேரடியாகக் கொடுப்பதைத் தடுக்கும் நோக்கத்தோடு, நேற்றைய தினம் தமிழ்நாடு அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பின் விளைவாக அரசு மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டு, அரசாங்கத்தின் மூலமாகத்தான் உதவ வேண்டும் என்ற நோக்கத்தையும் மறுபடியும் வெளிப்படுத்தியுள்ளது. எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கூறிய நடவடிக்கைகளை ரத்து செய்யுமாறு அரசின் தலைமைச் செயலருக்கும், வருவாய்த் துறைச் செயலருக்கும் வைகோ கடிதங்கள் அனுப்பியிருந்த நிலையில், தற்போது சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறையிடம் முறையிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'அரசியல் கட்சி சார்பில் உணவு வழங்கக் கூடாது என்ற அரசாணையை ரத்து செய்க' - வைகோ வழக்கு தாக்கல் - மதிமுக பொதுச்செயலாளர் வைக்கோ
சென்னை: கரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள் சார்பில் உணவுப் பொருள்களை நேரடியாக வழங்கக் கூடாது என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பானையை ரத்து செய்யக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
vaiko