தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 18, 2019, 8:12 PM IST

ETV Bharat / state

மருத்துவப் படிப்பில் ஆள்மாறாட்டம்: பதிலளித்த நாராயண பாபு

சென்னை: மருத்துவப் படிப்பில் இந்த ஆண்டு நடைபெற்ற கலந்தாய்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாணவர்களின் விபரங்களும் சரிபார்க்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயண பாபு தெரிவித்துள்ளார்.

narayana babu

சென்னை மருத்துவ கல்வி இயக்குனரகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயண பாபு, "மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழு செயலாளர் செல்வராஜன், நடப்பாண்டில் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சென்னையை சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து அசோக் என்ற மருத்துவ மாணவர், கல்லூரி முதல்வருக்கு அனுப்பிய புகாரைத் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் கடந்த 13ஆம் தேதி 4 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்தி அதன் அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையின் அடிப்படையில் கலந்தாய்வு விண்ணப்பத்தில் உள்ள மாணவர் புகைப்படமும், கல்லூரியில் படிக்கும் மாணவர் புகைப்படமும் வித்தியாசமாக இருப்பதாக சந்தேகம் உள்ளது. ஆகவே, இந்த புகார் குறித்து தேனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவப் படிப்பில் மாணவர் சேரும்போது அளிக்கப்பட்ட புகைப்படத்திற்கும், அவர் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு படிக்கும்போது இருந்த புகைப்படத்திற்கும் வித்தியாசம் உள்ளது.

நாராயன பாபு செய்தியாளர் சந்திப்பு

மாணவர் மூன்றாண்டுகளுக்கு முன்பு பன்னிரண்டாம் வகுப்பு படித்தபோது எடுத்த புகைப்படத்தினை விண்ணப்பத்தில் அளித்ததால் சரியாக கண்டறிய முடியவில்லை. மேலும் மாணவர் நீட் தேர்வு எழுதுவதற்கு அளித்த புகைப்படம் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. நீட் தேர்வினை உதித் சூர்யாவுக்கு பதில் வேறு மாணவர் எழுதினாரா என்பது குறித்தும், அதில் முறைகேடுகள் நடந்துள்ளனவா என்பது குறித்தும் அந்த ஆய்வின் பின்னர் தெரிய வரும்.

மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர் முறைகேடாக புகைப்படம் அளித்தது உறுதியானால் அந்த மாணவரை கல்லூரியிலிருந்து நீக்குவதுடன், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வரும் கல்வியாண்டில் மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களிடம் புகைப்படத்துடன் கைரேகையும் சேர்த்து பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

இது குறித்து மேலும் படிக்க: "நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்?" - சம்பந்தப்பட்ட மாணவர் மீது நடவடிக்கை கோரிய கல்லூரி நிர்வாகம்!

ABOUT THE AUTHOR

...view details