சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த 2 ஆண்டுகளை விட நடப்பாண்டில் அகில இந்திய ஒதுக்கீட்டில் சேராதவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என தெரிகிறது. மேலும், நீட் தேர்வில் மிகவும் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களும் ஸ்ட்ரே வேக்கன்சியில் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் இடங்களை தேர்வு செய்துள்ளனர். இளங்கலை நீட் தேர்வில் 40 பர்சன்ட் மதிப்பெண் பெற்றவர்களும் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் இடங்களை தேர்வு செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
அதேபோல், தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு மூலம் நடத்தப்படும் கலந்தாய்விலும் ஸ்ட்ரே வேக்கன்சி கலந்தாய்விற்கு பின்னரும், பல் மருத்துவப் படிப்பில் 100 இடங்கள் காலியாக உள்ளது. தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் காலியாக இருந்த இடங்களை அதிகளவில் மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்.
அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான இடங்களை தேர்வு செய்வதற்கான தரவரிசைப் பட்டியலில் மாணவர்களின் தரவரிசை எண்ணில் 12 லட்சத்து 21 ஆயிரத்து 896வது இடத்தைப் பெற்ற மாணவர், எம்பிபிஎஸ் படிப்பினை ஸ்ரீபாலாஜி மருத்துவக்கல்லூரி குரோம்பேட்டையை பொதுப்பிரிவில் எடுத்துள்ளார். அதேபோல், அதிகளவில் காலியாக இருந்த ஸ்ரீசத்யசாய் மருத்துவக் கல்லூரியிலும் அதிகளவில் இடங்கள் நிரம்பி உள்ளது.
அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வில் ஸ்ட்ரே வேக்கன்சியின்போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் 12 இடங்களும், கோயம்புத்தூர், கே.கே.நகர் இஎஸ்ஐசி, அரியலூர், திண்டுக்கல், நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, ஓமந்தூரார், ராமநாதபுரம், திருப்பூர், புதுக்கோட்டை, கீழ்பாக்கம், சேலம், சிவகங்கை, வேலூர், திருச்சி, மதுரை, கடலூர் உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் ஒற்றை இலக்கத்தில் இடங்கள் காலியாக உள்ளது.
ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரியில் 61 இடங்களும், பாரத் மருத்துவக் கல்லூரியில் 64 இடங்களும், சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 27 இடங்களும், ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரியில் 205 இடங்களும், பாலாஜி மருத்துவக் கல்லூரியில் 53 இடங்களும், ஸ்ரீராமசந்திரா மருத்துவக் கல்லூரியில் 2 இடம், ஸ்ரீ லலிதாம்பிகை மருத்துவக் கல்லூரியில் 5 இடம், விஎம்கேவி மருத்துவக் கல்லூரியில் 16 இடம் என தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் 480 இடங்களுக்கு மேல் காலியாக உள்ளது.