சென்னை:சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 119 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் மாநகராட்சி பள்ளிகளில் 98,633 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். 2,962 ஆசியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் 32 மேல்நிலைப் பள்ளிகளில் 11,395 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த மேல்நிலைப் பள்ளிகளில் 229 முதுநிலை ஆசிரியர்கள் ஏற்கனவே பணிபுரிந்து வருகின்றனர்.
தற்போது புதிதாகத் தமிழ் பாடப்பிரிவில் 12 ஆசிரியர்கள், தமிழ் பாடப்பிரிவில் 5 ஆசிரியர்கள், கணிதப் பாடப்பிரிவில் 4 ஆசிரியர்கள், இயற்பியல் பாடப்பிரிவில் 3 ஆசிரியர்கள், வேதியியல் பாடப்பிரிவில் 5 ஆசிரியர்கள், தாவரவியல் பாடப்பிரிவில் 4 ஆசிரியர்கள், விலங்கியல் பாடப்பிரிவில் 4 ஆசிரியர்கள், வணிகவியல் பாடப்பிரிவில் 2 ஆசிரியர்கள், பொருளாதார பாடப்பிரிவில் 6 ஆசிரியர்கள், வரலாறு பாடப்பிரிவில் 2 ஆசிரியர்கள், அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் 1 ஆசிரியர், மனையியல் பாடப்பிரிவில் 2 ஆசிரியர்கள், உடற்கல்வி பாடப்பிரிவில் 1 ஆசிரியர் என ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 51 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நேற்று (பிப்.7) பணிநியமன ஆணைகளை மேயர் பிரியா ராஜன் வழங்கினார்.