தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘அரச பயங்கரவாதத்தின் கொடூரம்; திமுக ஆட்சியில் நடந்த மாஞ்சோலை படுகொலை’

’தமிழ்நாட்டில் நடந்த அரச பயங்கரவாதப் படுகொலைகளில், 1999ஆம் ஆண்டு இதேநாளில் நடந்த திருநெல்வேலி மாஞ்சோலைப் படுகொலை வரலாற்றில் மறக்க முடியாத கரும்புள்ளி. அரச பயங்கரவாதத்தின் கொடூரம்' என மே 17 இயக்கம் தெரிவித்துள்ளது.

Manjolai labourers massacre
மாஞ்சோலை படுகொலை

By

Published : Jul 23, 2021, 5:15 PM IST

சென்னை: திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி 1999ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி ஊர்வலம் சென்றனர். அப்போது காவல் துறையினர் நடத்திய தாக்குதலையடுத்து, தாமிரபரணி ஆற்றங்கரையில் மூழ்கி 17 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் நடந்த அரச பயங்கரவாதப் படுகொலைகளில் ஜூலை 23, 1999ஆம் ஆண்டு நடைபெற்ற திருநெல்வேலி மாஞ்சோலைப் படுகொலை வாரலாற்றில் மறக்க முடியாத கரும்புள்ளி. அன்றைய திமுக அரசின் காவல் துறை நிகழ்த்திய மனிதத் தன்மையற்ற அடக்குமுறையால் தங்கள் அடிப்படை உரிமைக்குப் போராடிய பட்டியல் சமூகத்தைச் சார்ந்த 17 தொழிலாளிகள் படுகொலைக்கு உள்ளானார்கள்.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை

மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் அரசிடமிருந்து மும்பையைச் சேர்ந்த ஒரு பனியா மார்வாடி முதலாளியிடம் நியாயமற்ற விலைக்கு குத்தகைக்கு தரப்பட்டிருந்தது. அங்கு வேலை செய்த மக்களோ பெரும்பாலும் பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர்களாகவே இருந்தனர்.

கொத்தடிமைகள் போல நடத்தப்பட்டும், மிகக் குறைந்த கூலி வழங்கப்பட்டும் கொடுமைகளுக்கு உள்ளான தொழிலாளர்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடினர். ரூபாய் 56 என்றிருந்த தினக்கூலியை உயர்த்தி ரூபாய் 150 ஆக தருமாறும், எட்டு மணிநேர வேலை, முதலிய தொழிலாளர் சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியும் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டனர்.

ஜூலை 23ஆம் தேதி மாவட்ட ஆட்சியாளரிடம் கோரிக்கை மனு கொடுக்க குடும்பத்துடன் ஊர்வலமாகச் சென்றுகொண்டிருந்த தொழிலாளர்கள், பொதுமக்களை, தாமிரபரணி கரையின் குறுகிய பகுதியை அடைந்தபோது காவல் துறை திடீரென அடித்து விரட்டத் தொடங்கியது.

போராட்டத்தில் வெளிப்பட்ட சாதிய வன்மம்

காவல் துறையினரின் தாக்குதலை அடுத்து செய்வதறியாமல் ஓடிய மக்கள் அருகில் இருந்த தாமிரபரணி ஆற்றில் குதித்து மறுபுறம் சென்றடைய முயன்றனர். ஆனால் மறுபுறம் காத்திருந்த காவல் துறையினர் அவர்களை கரை ஏற விடாமல் அடித்தனர். மேலும் தண்ணீருக்குள் தத்தளித்த மக்களை நோக்கிப் பெரும் கற்களை எறிந்து தாக்கினர்.

மக்கள் மீது கண்மூடித்தனமாக ‘லத்தி சார்ஜ்’ செய்து, ஒருமுறை துப்பாக்கியால் மக்களை நோக்கிச் சுட்டனர். கரை ஏறிய மக்களை அடித்து நதிக்குள் தள்ளி கொலைசெய்தது மட்டுமல்லாமல் ஒரு கைக்குழந்தையையும் தண்ணீரில் தூக்கிப் போட்டுக் கொன்றிருந்தனர். ஊர்வலத்தில் காவல் துறை படுகொலைகள் ஒருபுறம் இருக்க, கரையில் இருந்த தொழிலாளர்கள் கடுமையாக அடித்து காயப்படுத்தப்பட்டிருந்தனர்.

ஏறத்தாழ 500 பேருக்கும் மேல் காயமுற்று கிடந்த நிலையில் பலரை காவல் துறை தேடித்தேடி கைதுசெய்தது. பெண்களின் ஆடைகளை உருவி அவமானப்படுத்தியது. எல்லோரையும் சாதி சொல்லி “உனக்கெல்லாம் போராட்டம் ஒரு கேடா, இனி போராடுவாயா?” என்று கேட்டும், பெண்களைத் தகாத சொற்களால் திட்டியும் காவல் துறையினர் தங்கள் சாதி ஆணவத்தை வெளிக்காட்டினார்.

அரச பயங்கரவாதத்தின் கொடூரம்

அருகில் இருந்த வீடுகளில் தஞ்சம் புகுந்தவர்களை வீடு புகுந்து தாக்கினர். அரசோடு (திமுக ஆட்சி) கைக்கோத்த மருத்துவர்கள், படுகொலைக்கு உள்ளான 17 பட்டியல் சமூகத் தொழிலாளர்களின் உடற்கூராய்வில் ‘அனைவரும் தண்ணீரில் மூழகித்தான் இறந்தார்கள்’ என்று அறிக்கை தந்தனர்.

எனவே இறந்தவர்கள் உடலை உறவினர்கள் வாங்க மறுத்து மறு உடற்கூராய்வு செய்ய கோரிக்கைவைத்தனர். ஆனால் திமுக அரசோ மறு உடற்கூராய்வு செய்யாமல், இறந்தவர்களின் உடலை உறவினர்கள் யாருமின்றி தாமே புதைத்தது.

அதுமட்டுமல்லாமல் “மக்கள்தான் முதலில் காவல் துறையினரை தாக்கினர்” என்று அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார். இன்று நாம் கண்முன்னே அதிமுக - பாஜக அரசால் நடைபெற்ற ஸ்டெர்லைட் நிறுவனத்திற்காக நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு எந்தவிதத்திலும் குறையாத கொடூரம் மாஞ்சோலைப் படுகொலை என்றால் மிகையாகாது.

யார் அதிகாரத்தில் இருந்தாலும் உழைக்கும் மக்கள் உரிமைக்குரலை நசுக்கவே பார்ப்பார்கள் என்பதை இந்த இரு சம்பவங்களும் எடுத்துரைக்கின்றன. பட்டியல் சமூக மக்கள் என்பதாலும், உழைக்கும் வர்க்கம் என்பதாலும் விரட்டி விரட்டி கொல்லப்பட்ட மாஞ்சோலைத் தொழிலாளர்களின் நினைவுநாளில் போராடிய மக்களை நினைவுகூருவதுடன், படுகொலைசெய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு வீரவணக்கத்தை மே பதினேழு இயக்கம் செலுத்துகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு நினைவு சின்னம்- செல்வப்பெருந்தகை உறுதி!

ABOUT THE AUTHOR

...view details