சென்னை: அண்ணாசாலையில் உள்ள மின் பகிர்மான தலைமை அலுவலகத்தில் மின் விநியோகம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
ஆய்வுக்கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "உச்சபட்ச மின் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டு 16,000 மெகாவாட் மின்சாரத்திற்கு மேல் அதிகமாகவில்லை. அதேபோல் 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளிலும் 16,000 மெகாவாட்டிற்கு மேல் அதிகமாகவில்லை.
ஆனால், கடந்த 17 நாட்கள் 16,000 மெகாவாட்டிற்கு மேல் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. 8.32 யூனிட்டாக உயர்ந்துள்ளது. பழுது ஏற்பட்ட இடங்களை உடனே சரிசெய்ய வேண்டும் என ஆய்வுக்கூட்டத்தில் தெரிவித்திருக்கிறோம். ஒரு வாரமாக 57 ஆயிரம் டன் நிலக்கரி வந்து கொண்டிருக்கிறது. 22 ரேக்கில் 72 ஆயிரம் டன் நிலக்கரி வரவேண்டும். ஆனால், இப்போது 15 ரேக்கில் தான் வந்து கொண்டிருக்கிறது. அதை அதிகப்படுத்த ஒன்றிய அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளோம்.
37 விழுக்காடு அதிகமாக மின் உற்பத்தி:குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்களில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது. மின்சாரம் பற்றி எதுவுமே தெரியாமல் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசிக் கொண்டிருக்கிறார். அதிகப்படியாக மின்சாரத்தை உற்பத்தி செய்து வெளிமாநிலங்களுக்கு யூனிட் ரூ.12 அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.