சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்) எஸ். மனிஷ் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது, “சென்னை மாநகராட்சி மூலமாக மாதத்தின் முதல் தேதிகளில் போதைப்பொருள்கள் பயன்படுத்துவதைத் தடுக்கும் வண்ணம் விழிப்புணர்வு தொடங்கவுள்ளோம்.
இது அக்டோபர் 1ஆம் தேதிமுதல் தொடங்கப்படுகிறது. சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களுக்கு அடிமையாகாமல் தடுக்கும் வகையில், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். அதற்கான உதவி எண்ணும் தொடங்கவுள்ளோம். அதன்மூலம் உதவிகளைப் பெற முடியும்.
விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்
கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முதற்கட்டமாகத் திட்டமிட்டுள்ளோம். பின்னர் பள்ளி மாணவர்களுக்குப் போதைப்பொருள் தடுப்பு - குப்பை சேகரிப்புத் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்கள் மூலமாக அவர்களின் வீடுகளின் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளோம்.
இதற்காகக் குழு அமைக்கப்படவுள்ளது. பல்வேறு துறைசார்ந்த அலுவலர்கள் இக்குழுவில் இருப்பார்கள். அதுபோல் உதவி எண் விரைவில் அறிவிக்கப்படும். அதில் விற்பனை தொடர்பான புகார்களும் தெரிவிக்கலாம்.
மக்கள் டெங்கு பாதிப்பைத் தடுக்க நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கடந்த 15 நாள்களில், இதுவரை 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடு வீடாகச் சென்று ஆய்வுசெய்ய 3000 களப்பணியாளர்கள் உள்ளனர். வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளதால் தீவிரமாகக் கண்காணித்துவருகிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கோரி வழக்கு - தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு