ஏழு கோடி நீரிழிவு நோயாளிகளின் இருப்பிடமாக உள்ள நம் நாட்டில், நேரடியாகவோ மறைமுகமாகவோ 35 கோடி பேர் இந்த நோயால் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். இதைத் தவிர, நீரிழிவு நோயாளிகளை பாதிக்கக்கூடிய மற்ற காரணிகள் என்னென்ன எனப் பார்த்தோமானால், மன அழுத்தமும் மனப் பதற்றமும் சர்க்கரை குறைபாடுடையோர், அவர்களின் குடும்பத்தினரின் மகிழ்ச்சியைக் கெடுப்பதாக இருக்கக் கூடும்.
நம் நாட்டைப் பொறுத்தவரை, கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள யார் ஒருவருக்கும் நேர்கின்ற ஆபத்தையே நீரிழிவு நோயாளிகளும் எதிர்கொள்கின்றனர். இருப்பினும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவிட்-19 நோய் ஏற்பட்டால், மற்ற வகையினரைவிட சிக்கல்மேல் சிக்கல் வரக்கூடிய ஆபத்து மிக அதிகமாக உள்ளது.
நீரிழிவு நோய் கொண்ட ஒருவரை கரோனா வைரஸ் தொற்றினால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவுக் கட்டுப்பாடும் பாதிக்கப்படுகிறது. வைரஸ் தொற்றை எதிர்த்து நிற்பதற்காகக் குறிப்பிட்ட நபரின் உடலானது வழக்கத்தைவிட கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டு செயல்படும்.
இதன் விளைவாக, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது அதிகமாகவும் குறைவாகவும் மாறியபடி இருக்கும். நீரிழிவு நோயானது உடலின் எல்லா உறுப்புகளையும் பாதிக்கிறது என்பது நமக்குத் தெரியும். அதைக் கட்டுக்குள் கொண்டுவராவிட்டால், நம் கண்கள், கால்கள், சிறுநீரகங்கள், உடலின் மற்ற உறுப்புகளில் இருக்கும் பிரச்னைகளை மேலும் மோசமடையச் செய்யும். எனவே, மற்றவர்களைவிட நீரிழிவு நோயாளிகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
கரோனா தாக்கத்திலிருந்து தப்பிக்க நீரிழிவு நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்?
‘வீட்டிலேயே இரு’ என்னும் அறிவுரையைக் கறாராகக் கடைப்பிடிக்க வேண்டும். தனி நபர்களுக்கு இடையில் 1-2 மீட்டர் இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்கிற வழிகாட்டுதலின்படி, உங்களைப் பார்க்க வருபவர்களிடம் இந்தப் பாதுகாப்பான இடைவெளி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
* முன்னர் எடுத்துக்கொண்டிருந்த எல்லா மருந்துகளையும் தொடர்ந்து எடுக்க வேண்டும். நீங்களாகவே மருந்தின் அளவைக் குறைக்கவோ அதை நிறுத்தவோ கூடாது. மிகை ரத்த அழுத்தக் குறைப்பு மருந்துகள், ஆஸ்பிரின் போன்ற வேறு மருந்துகளை நீங்கள் எடுத்துக்கொண்டிருந்திருந்தால், முன்னர் எந்த அளவு மருந்து எடுத்துக் கொண்டீர்களோ அதே அளவு மருந்தையே தொடர வேண்டும்.
* மூன்று/ நான்கு வாரங்களுக்குத் தேவைப்படும் நீரிழிவு நோய் மருந்துகளை வாங்கி வைத்துக்கொள்ளவும். இதன்மூலம், நீரிழிவுக் கட்டுப்படுத்தலுக்கான அத்தியாவசிய மருந்துகள் இல்லாமல் போகும் நிலையைத் தவிர்க்க முடியும்.