சென்னை கண்ணகி நகர் 16ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் என்ற நண்டு (33). இவருக்குத் திருமணமாகி மனைவி இறந்த நிலையில் சிலம்பரசன் என்ற மகன் உள்ளார். சிலம்பரசன் தாத்தா வீட்டில் தங்கி படித்துவருகிறார்.
கழுத்தறுத்துக் கொலை
சந்தோஷ் புதுப்பேட்டையில் சாலையோரம் தங்கி கூலி வேலை செய்துவந்தார். இவர் நேற்று (டிசம்பர் 16) இரவு வேலை முடித்துவிட்டு ஆதித்தனார் சாலை நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மதுபோதையில் வந்த இருவர் சந்தோஷை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். இதில் சந்தோஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற எழும்பூர் காவல் துறையினர் சந்தோஷின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கொலைக்கான காரணம்
விசாரணையில் சந்தோஷுக்கும் கண்ணகி நகரைச் சேரந்த இளவரசன் (21) என்பவரின் மனைவிக்கும் இடையே திருமணத்திற்கு வெளியேயான உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளவரசன், நண்பர் அருணுடன் சேர்ந்து, சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த சந்தோஷை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் தப்பி ஓடிய இளவரசன், அருண் ஆகிய இருவரைத் தனிப்படை அமைத்து காவல் துறையினர் தேடிவருகின்றனர்.