சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் மழை காரணமாக ஆங்காங்கே மழைநீர் தேங்குகிறது. இதனால் பல இடங்களில் மின்கசிவு ஏற்பட்டு, உயிரிழப்பும் ஏற்பட்டுவருகிறது.
இந்நிலையில் சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணய்யா (37). இவர் நேற்றிரவு (செப்டம்பர் 6) கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ் சாலையில் உள்ள கடையில் உணவு வாங்க சென்றிருந்தார்.
அப்போது அங்கு தேங்கியிருந்த மழைநீரில் தரையில் புதைக்கப்பட்டிருந்த மின்சார வயரிலிருந்து மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதையறியாத கிருஷ்ணய்யா தேங்கியிருந்த நீரில் மிதித்த அடுத்த கணமே துடிதுடித்த உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கீழ்ப்பாக்கம் காவல் துறையினர், அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.