சென்னை: காசிமேடு காசிமா நகர் ஒன்றாவது தெருவை சேர்ந்தவர் மீனவர் மைக்கேல் நாயகம். இவருடைய மனைவி அந்தோணி மேரி (60). மைக்கேல் நாயகம் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் வீட்டில் இருந்த அந்தோணி மேரி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அந்தோணி மேரியின் மகள் சுபா கொடுத்த புகாரின்பேரில் காசிமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் மூன்றாவது மாடியில் இருந்த அந்தோணி மேரி கொலை செய்யப்பட்டிருந்ததால் அவருக்கு நன்கு தெரிந்தவர்கள் தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் தனிப்படையினர் விசாரணையை தொடங்கினர். அப்போது அந்தோணி மேரியின் தோழியின் மகனும், மைக்கேல் நாயகத்துடன் மீன்பிடி தொழிலுக்கு செல்லும் காசிதோட்டம் ஒன்றாவது தெருவை சேர்ந்த சகாயம் அலெக்ஸ் (42) என்பவரை சந்தேகத்தின்பேரில் தனிப்படையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டர்.
விசாரணையில் அந்தோணி மேரியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். அதாவது, சகாயம் அலெக்ஸ்க்கும் அவருடைய மனைவிக்கும் பணத்தேவைக்காக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், பணத்தேவைக்காக திருடலாம் என சகாயம் அலெக்ஸ் திட்டமிட்டுள்ளார்.