சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்படத் தயாராகிக் கொண்டு இருந்தது.
அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது மேற்கு வங்க மாநில முகவரி பாஸ்போர்ட்டுடன் பிபுல் மண்டல் (35) என்பவர் இந்த விமானத்தில் மலேசியா நாட்டிற்கு செல்ல வந்தார்.
ஆனால், குடியுரிமை அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவருடைய பாஸ்போர்ட்டை நவீன கருவி மூலம் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பாஸ்போர்ட் போலியான பாஸ்போர்ட் என்று தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பயணியின் பயணத்தை ரத்து செய்த குடியுரிமை அதிகாரிகள் அவரை தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவருடைய பெயர் விபுல் மண்டல். ஆனால் அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. இந்தியாவுக்குள் ஊடுருவி கொல்கத்தா சென்றுள்ளார். அங்கு போலி பாஸ்போர்ட் தயார் செய்து கொடுக்கும் ஏஜெண்டுகளை அணுகி பெருமளவு பணம் கொடுத்து இந்திய பாஸ்போர்ட் வாங்கியது தெரியவந்தது.