சமூக வலைதளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனைப் பயன்படுத்தி மோசடி கும்பல்களும் பல்வேறு வகைகளில் பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்துவருகின்றன. குறிப்பாக ஓ.எல்.எக்ஸ். மோசடி, ஓடிபி மோசடி, ஆன்லைன் மோசடி என்று புதிது புதிதாக மோசடியில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதேபோல் தற்போது ‘சதுரங்க வேட்டை’ பட பாணியில் பொதுமக்களின் ஆசையைத் தூண்டி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக காதலர்களை அடையாறு சைபர் கிரைம் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 2ஆம் தேதி கிண்டியைச் சேர்ந்த சூர்யகுமார் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில், விலையுயர்ந்த செல்போனை குறைந்த விலையில் வழங்குவதாக விளம்பரம் ஒன்றைப் பார்த்துள்ளார். அதனை நம்பி விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்குத் தொடர்புகொண்டு பேசியபோது உடனடியாக கொரியர் மூலமாக செல்போன் அனுப்புவதாகவும், 12 ஆயிரம் ரூபாய் பணத்தை கூகுள்பே அல்லது போன்பே மூலம் அனுப்புமாறும் அந்த நபர் கூறியுள்ளார்.
இதனால் 12 ஆயிரம் ரூபாயை அந்த எண்ணுக்கு அனுப்பியுள்ளார். ஆனால் நீண்ட நாள்களாகியும் செல்போன் வராமல் இருந்ததால், மீண்டும் அந்த எண்ணிற்குத் தொடர்புகொண்டு பேசியபோது இணைப்பைத் துண்டித்துவிட்டதாக சூர்யகுமார் அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.